இயக்குநர் சேரனின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள ‘திருமணம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குநர் சேரன்.
தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நீண்ட காலமாக திரைப்படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்த சேரன் தற்போது ‘திருமணம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடித்துள்ளார்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றாலும், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதில் இருக்கும் சிக்கல்களை கூறும் வகையில் சில திருத்தங்களுடன் சேரனின் ‘திருமணம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் மார்ச்.1ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.