மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
கோலிவுட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இயக்குநர் பிரியதர்ஷினி ‘அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் ஜெயலலிதா பயோபிக் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் தற்போது ஜெயலலிதா பயோபிக் பணிகளை தொடங்கியுள்ளார். ‘தலைவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை உருவாக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமாக உருவாக்கவிருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகவுள்ளது.
ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளான இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்கு இணை கதாசிரியராக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தலைவி’ என்ற தலைப்பை தவிர வேறு ஒரு நல்ல தலைப்பு இப்படத்திற்கு இருக்க முடியாது. இத்தகைய தலைவரின் தைரியத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். அவரது கதை படமாக்குவதில் எனக்கு பெருமை. பொறுப்புணர்வுடன் கடுமையாக உழைத்து ஒரு நேர்மையான பயோபிக் படத்தை கொடுக்க நினைப்பதாக இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.