நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மீது கூறப்பட்ட பண மோசடி புகாருக்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஃபேஷன் அன்ட் பியூட்டி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சிக்கு வராததால் நடிகை சோனாக்ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது மொராதாபாத் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரமோத் ஷர்மா புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் புகாரை ஏற்றுக் கொண்டு மொராதாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனாக்ஷி சின்ஹாவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனுகியிருந்தனர். ஆனால், பலமுறை அவர்களுக்கு நினைவுப்படுத்தியும் முன்பணம் கொடுக்கவில்லை. டெல்லியில் இருந்து திரும்பி வருவதற்கு விமான டிக்கெட்களையும் முறையாக முன்பதிவு செய்யவில்லை. மறுநாள் சோனாக்ஷிக்கு ஷூட்டிங் இருந்ததால், இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகினார்.
பல முறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தொடர்புக் கொண்டும் எதுவும் முறையாக செய்யவில்லை. இதனால், மும்பை விமான நிலையத்தில் இருந்து சோனாக்ஷி மற்றும அவரது குழுவினர் வீடு திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீடியாவை பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதனை நிறுத்தாவிட்டால் சோனாக்ஷியும், அவரது குழுவினரும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.