தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது ஒளிப்பதிவில் தமிழில் 'அக்ரஹாரத்தில் கழுதை', 'பகல் நிலவு', 'மந்திர புன்னகை' உள்ளிட்ட படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை.
இவர் இயக்குநர் மணிரத்தனத்தின் முதல் தமிழ் படமான 'பகல் நிலவு'க்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான மலையாள படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் சகோதரரர் ஆவார். இந்நிலையில் ராமச்சந்திர பாபு உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ராமச்சந்திரபாபுவின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு படங்களுக்கும் இவரின் பங்கு மகத்தானது. இவர் இந்திய ஒளிப்பதிவாளர்கள் அமைப்பின் நிறுவனர். இந்திய சினிமா ஒரு அற்புதமான கலைஞனை இழந்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.