சிறிய கிருமியான கொரோனா வைரஸ் அனைவரின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கி உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்போது மீளப் போகிறோம், வழக்கம் போல வாழ்க்கை எந்த நாளில் மாறப் போகிறது என்பதுதான் கிட்டத்தட்ட அனைவருடைய மனநிலை.
இந்நிலையில் அனைத்து வணிகச் செயல்பாடுகளும் ஸ்தம்பித்துப் போயிருக்க, திரைத்துறையைப் பற்றிய செய்திகள் இணையத்தில் தினமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எது உண்மை எது கட்டுக்கதை என்பதை பரித்துப் பார்க்க முடிவதில்லை.
சமீபத்தில் பாலிவுட் மீடியாவுக்கு தமன்னா அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியது, ‘எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான் 365 நாள்களிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறிகையில், ‘தென்னிந்தியத் திரையுலகில் வெவ்வேறு வகையான படங்களில் நடித்து வருகிறேன். நான் பாலிவுட்டிலிருந்து சற்றுத் தள்ளி இருப்பதற்குக் காரணமே, ஒரே வகையான படங்களில் நடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். சினிமா மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. ஒரே இடத்தில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.
என்னைப் பற்றி சில வினோதமான வதந்திகள் பரவி உள்ளன. அதாவது, எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை, எனக்கு பாலிவுட்டில் எதிர்காலம் இல்லை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் 365 நாள்களிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அதனால்தான் என்னால் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் மாறி மாறி நடிக்க முடிவதில்லை. யாருடனும் நான் எந்தப் போட்டியிலும் இல்லை. மேலும் யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை’’ என்று கூறியுள்ளார்.