நடிகர் விஜய்யின் தற்போதைய செல்ஃபி முதல் மதம் மாற்றும் வதந்தி வரை, அனைத்துக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் அவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதுமட்டுமில்லாமல், நடிகர் விஜய் மேலும் சிலருடன் சேர்ந்து மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது. இதையடுத்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்காக ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பேட்டியில், ' மிகவும் நேர்மையாக, தொழில் மீது நியாயத்துடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களை அடிக்க நிறைய பேர் கையில் கல்லோடு காத்திருக்கிறார்கள், அப்படி அவர்கள் ஒவ்வொருமுறை செய்யும் போதும், நாங்கள் மேலும் வளர்ந்துகொண்டே போகிறோம். விஜய் ஒரு கிருத்துவர் என இப்போது குற்றச்சாட்டு வைப்பது தவறு. அவர் ஒருபோதும் அந்த அடையாளத்தை மறைத்தது இல்லை. அவர் எப்போதும் ஜோசப் விஜய் தான். வீட்டிலும் பள்ளியிலும் 'ஜோ' என்பது தான் அவரின் செல்லப்பெயர். எங்கள் வீட்டில் நான் மாதா படம் வைத்திருக்கிறேன், என் மனைவி பூஜை அறை முழுக்க பல ஹிந்து கடவுள்களின் படங்களை வைத்துள்ளார். அதுபோல எல்லா மதத்தையும் நேசிக்கும் என்னம் கொண்டவர்கள் நாங்கள். விஜய் சினிமாவில் நடித்தபோது அவர் இளையதளபதியாக இருந்தார், அவர் இப்போது மக்களுக்காக நடிக்கிறார். அதனால் தான் தளபதி ஆகியிருக்கிறார். எனக்கு எப்போதுமே விஜய் என்பதை தான் மிகவும் பிடிக்கும், நெய்வேலியில் அவர் எடுத்த செல்ஃபியை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. அத்தனை பேருடன் சேர்த்து அவர் எடுத்த செல்ஃபி, எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி இருக்கிறது. அதே போல மதமாற்றம் சர்ச்சைக்கு பதிலடியாக விஜய் சேதுபதி, போய் வேற வேலை இருந்தா பாருங்கடா என ஒற்றை வரியில் சொல்லிவிட்டார். அதுதான் மக்களின் வெளிப்பாடும் கூட' என அவர் தெரிவித்துள்ளார்.