ரஜினி நடித்த ’உழைப்பாளி’ படம் மூலம் நடன இயக்குநராக திரையுலகுக்கு அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். பின்னர் சிறுசிறு வேடங்கள், ஹீரோ, இயக்குனர் என்று பல பணிகள் ஆற்றி தற்போது தமிழின் முன்னணி ஹீரோவாக உள்ளார்.
இந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ’காஞ்சனா 3’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷைகுமார் நடிப்பில் இவர் இயக்கும் ’லக்ஷ்மி பாம்’ அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.திரைத்துறையை கடந்து மாற்றுத்திறனாளிகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இவர் தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவரின் பேச்சுக்கு பல எதிர்வினைகள் எழுந்தன. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் விரிவாக எழுதி இருக்கும் ராகவா லாரன்ஸ்,’பலர் நான் ரஜினியில் வழிநடத்துதலின் படி செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். அவரிடம் நான் எதிர்பார்ப்பது ஆசிர்வாதத்தையும், ரசிகனாக ஒரு ஃபோட்டோவையும் மட்டுமே. ரஜினி யாரையும் வழிநடத்துபவன் அல்ல. நான் என்னிடம் உதவி கேட்பவர்களுக்காகவே தமிழக முதல்வரை நாடினேன். நான் இந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனோ எதிரியோ கிடையாது. என் மீது வைக்கப்படும் விமர்சனகளுக்கு நான் அன்புடனே பதிலளித்து வருகிறேன். அன்பு தான் தமிழ்.’ என்று குறிப்பிட்டார்.