சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த டிசம்பர் 20 வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஹீரோ'. இந்த படத்தை 'இரும்புத்திரை' பட புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து எழுந்த சர்ச்சை பற்றி இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஹீரோ கதை தொடர்பாக எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுமார் 25 நபர்கள் முன்னிலையில் விளக்கமளித்தைது பற்றியும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது, எனக்கு முன்னாலேயே புகார் அளித்த நபர் அவருடைய கதையை பதிவு செய்திருப்பதினால், நான் அந்த நபருக்கு தக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தினீர்கள்.
என் கதையின் கருவை பத்திரிக்கை செய்தியில் இருந்து தான் உருவாக்கியிருக்கிறேன். கதை உருவான சிறு சிறு வளர்ச்சிக் கட்டங்களுக்குமான பதிவுகள், ஆவணங்கள், ஆடியோ ஃபைல் வைத்திருக்கிறேன். மேலும், பொன்.பார்த்திபன், சவரிமுத்து, அந்தோனி பாக்கியராஜ் ஆகிய மூன்று எழுத்தாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல சம்பளத்தை பெற்று தந்திருக்கிறேன். நான் எழுத்தாளர்களை மதிப்பவன் என்ற போதிலும் என் கதைக்கு துளியும் சம்மந்தபடாத ஒருத்தருக்கு நான் ஏன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த கடிதத்தின் மூலமாக நான் தங்களை மீண்டும் பணிவுடன் கேட்டுக்கொள்வதெல்லாம் தயவுசெய்து பதிவு செய்யப்பட்ட இரு முழுத்திரைக்கதையையும் முறையாக ஒப்பிட்டு பார்த்து, தக்க முடிவை எடுக்கவும் என்பதே என்று குறிப்பிட்டுள்ளார்.