கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போகியுள்ளது. எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் வெளியே வர முடியாத சூழல். மேலும் வணிகம் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தொழில் நிறுவனங்கள் முடிந்த வரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தற்போது அதற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசனும் ட்வீட் செய்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனோ தொற்று இருப்பதாக அறிவிக்க அந்த பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு சில ஹாலிவுட் பிரபலங்களும் கொரோனா பாதித்தது குறித்து அறிவித்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் பாடகர் கனிகா கபூர் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கொரோனா பாதித்த முதல் இந்திய திரைப்பட பிரபலம் என்று கூறப்படுகிறது. கனிகா கபூர் சன்னி லியோனின் 'பேபி டால்' பாடல் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில் அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கடந்த 4 நாட்களாக எனக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. பரிசோதித்து பார்த்த போது கொரோனா இருப்பது உறுதியானது. நானும் எனது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.
உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள். காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தும் நான் நார்மலாக தான் உணர்ந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். நமது மருத்துவர்கள், அரசு அதிகாரிகளின் உதவியால் இதிலிருந்து வெளியேறலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.