ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கி இந்திய அரசு உத்தரவிட்டதன் விளைவாக, பாகிஸ்தான் சினிமாவில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்படாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மோடி தலைமையிலான இந்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவித்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில், இனி இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, பாகிஸ்தான் சினிமாவில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பாடாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழக்க காரணமான புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலகோட்டில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவதும், இந்திய விளம்பரங்களை புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவித்தது.