மணி ஹைஸ்ட் (Money Heist - La casa de papel) என்ற ஸ்பானிய மொழித் தொடர் முதலில் அந்நாட்டில் மற்ற வெப் தொடரைப் போலத்தான் மக்களால் பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து நடந்ததுதான் அசல் ‘சம்பவம்’. நெட்ப்ளிக்ஸ் அத்தொடரை வாங்கியபின் இதன் முக்கியத்துவம் மெள்ள ஜூரம் போல ரசிகர்களிடையே பரவியது. ஒரு கல்ட் க்ளாஸிக் வரிசைக்குப் போகுமளவுக்கு இத்தொடரில் ஈர்க்கும்விதமான விஷயங்கள் என்ன? பார்க்கலாம்.
கதையின் ஒன் லைன் - ஒரு bank roberry-ல் தந்தை கொல்லப்பட, சிறு வயதிலிருந்தே அவனுக்கு எப்படியாவது தந்தை பாதியில் விட்டுப்போன அதனை செய்து முடிக்க வேண்டும் என்று ஆசையை வளர்த்துக் கொள்கிறான். அதிபுத்திசாலியான அச்சிறுவன் தானே தன்னை வளர்த்துக் கொள்கிறான், மிகப் பெரிய அறிவாளியாக, அற்புதமான ஒரு ஜீனியஸாக தன்னை உருவாக்குகிறான். அவனுடன் பயணப்படுவது அவனது தம்பி, மற்றும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். அவனொரு புத்திஜீவியாக மாறியது இவ்விதம்தான்.
புரொஃபஸர் என்ற அடைமொழியில் அவன் அழைக்கப்பட, அவன் தம்பி பெர்லின் என்று அறியப்படுகிறான். நாடுகளின் பெயரை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் தனக்கென எந்த தனி அடையாளமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். இந்த சகோதர்கள் தங்களின் கனவுத் திட்டத்தை நிஜமாக்க, ஏழு நபர்கள் அடங்கிய ஒரு சிறு குழுவை உருவாக்குகிறார்கள். பிரம்மாண்டமான ஒரு கொள்ளைத் திட்டத்தை அணு அணுவாக வெகு காலமாக மிகத் துல்லியமாக உருவாக்கி வருகிறார்கள்.
புரொபஸரின் திட்டம் ராயல் மிண்ட் ம்யூசியத்தில் உள்ள கோடிக்கணக்கான பணம். பெர்லினின் திட்டம் பேங் ஆஃப் ஸ்பெய்ன்னில் பாதுகாக்கப்பட்டுள்ள பெருமதியான தங்கம். இவர்களின் திட்டம் ஜெயித்ததா? இவர்களுடன் இணைந்த குழுவினர் ஒரு குடும்பமாக மாறி, (ஒவ்வொருக்கும் ஒரு நகரின் பெயர் - டோக்யோ, நைரோபி, ஆஸ்லோ, ஹெல்சின்கி, மாஸ்கோ, டென்வர், ரியோ) இக்கொள்ளையில் பயணப்பட்டு ஜெயித்தார்களா? இவர்களைப் பிடிக்க ரக்கேல் மரில்லா என்ற பெண் போலீஸ் இன்ஸ்பெகர் கடைசியில் என்ன ஆனார்? கொள்ளை அடித்த பணத்துடன் அவர்கள் எங்கே பதுங்கினார்கள் என்ற பல கேள்விகளுக்கு மிக மிக சுவாரஸ்யமான ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை தருகிறது இந்த மணி ஹைஸ்ட்.
இசை, காதல், காமம், கொண்டாட்டம், மரணம்
மரணம் எந்த நேரமும் ஏற்படலாம் என்ற சூழலுள்ள இந்த வாழ்க்கையில் எது இன்பம். எதுதான் நிலை? மணி ஹைஸ்ட் தொடரின் இன்னொரு சிறப்பம்சம் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காதலும் அதன் நிமித்தமும், பின் நிகழும் காமமும் எனலாம். மனதை உருகச் செய்யும் பாடல்களும், அதிரடியான பின்னணி இசையும் கதைசொல்லல் முறைக்கு பக்கபலமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு கொள்ளைக் கும்பலுக்கு இத்தனை ஆதரவா என்று நம்மால் திகைக்கவே முடியாது. காரணம் பார்வையாளர்கள் புரொபஸரின் அணியில் ஏற்கனவே இணைந்துவிடுவார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் சாகஸம் செய்வதற்கான விழைதல் இருப்பதே அதன் உளவியல். ஒரு மகத்தான கம்யூட்டர் கேம் போல செட் செய்யப்பட்டிருக்கும் மணி ஹைஸ்ட் மனதை நெகிழ வைக்கும் காட்சிகளால் தன் தரத்தில் உயர்ந்தது.
ராயல் மிண்ட் ஹைஸ்டை நிகழ்த்தும் முன்பு புரொபஸர் அனைவருக்கும் ஆறு மாதம் ட்ரெய்னிங் தருவார். அங்கு அவர்களுக்கு பாலபாடமே யாரிடமும் எவ்விதமான உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே. ஆனால் குழுவின் முதல் ஜோடி அந்த இடத்திலேயே உருவாகிவிட்டனர். அவர்கள்தான் டோக்யோ மற்றும் ரியோ.
டோக்யோ துடிப்பானவள். ரியோவை விட கிட்டத்தட்ட 12 வயது அதிகம் அவளுக்கு. ரியோ சந்தர்ப்பவசத்தால் சின்னச் சின்ன ஹேக்கிங் செய்து பிழைப்பவன், பெரிய திருட்டு அனுபவங்கள் அவனுக்குக் கிடையாது. ஆனால் டோக்யோ (அவளது வாய்ஸ் ஓவரில்தான் ஒரு பகுதி கதை நகரும், மற்ற பகுதி கதை புரொபஸரின் point of view-வில் flash back காட்சிகளில் முன் நகரும். இப்படி சீட்டுக் கட்டைப் போல நகரும் கதை அமைப்பும் இத்தொடருக்கு ஒரு ப்ளஸ்) ரியோவின் மீது அபரிதமான காதலையும், கட்டுப்பாடற்ற காமத்தையும் கண்டடைகிறாள். பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தில் ரியோ எப்போதும் நிழலாகவே அவளுடன் இருப்பான்.
புரொபஸரின் மூளையில் உதித்த இந்தத் திட்டத்தின்படி, அக்குழுவினர் துப்பாக்கி சகிதம், ஜெல்லட்டின், டைம் பாம் சகிதம் ராயல் மிண்ட்டுக்குள் நுழைகிறார்கள். உலகப் புகழ்ப்பெற்ற ஓவியரான சால்வடார் டாலியின் முகமூடியை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். சிவப்பு நிற யூனிபார்ம் அணிந்து ஒரே போலவே தோற்றத்தில் உள்ளார்கள். டாலியின் உருவத் தோற்றத்தில் டாப் ஆங்கிளில் ஹைஸ்ட் கும்பலும், பிணைக்கைதிகளும் காண்பிக்கப்படும் பல காட்சிகள் கண்களுக்கு விருந்து.
அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அவர்களுக்கும் டாலி முகத்திரையையும் சீரூடையையும் தருகிறார்கள். அந்த இடத்தின் அதிகாரியான அட்டூரோ அவனது செக்ரெட்டரியான மோனிகாவின் மீது மோக வலையில் இருப்பவன். ஆனால் அவள், தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தவுடன், அவன் அவசரமாக மறுக்கிறான். தனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பதாக கூற மோனிகா அதிர்ச்சி அடைகிறாள்.
மிகச் சரியாக இந்த சமயத்தில்தான் ஹைஸ்ட் கும்பல் உள்ளே நுழைகின்றனர். அனைவரையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிக நேரம் பிடிக்கவில்லை அவர்களுக்கு. ஹீரோயிஸம் காண்பிக்கத் துணிந்த அடூரோவை துப்பாக்கியில் சுடும் நிகழ்வுகளும் நடக்கிறது. அச்சத்தில் அனைவரும் பணிந்து போக, ராயல் மிண்டில் பணத்தை அச்சடிக்கு பொறுப்பை ஏற்கிறாள் நைரோபி.
முதல் காதலர்களான டோக்யோ ரியோவின் உறவு ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு கட்டத்தில் கொள்ளையடிக்கும் இடத்தில் மற்றவர்களுக்குத் தெரிய வர, அவர்கள் அதற்குப் பெரிதால அலட்டிக் கொள்ளவில்லை. ஆமாம் என்று உண்மையை போட்டு உடைக்கிறார்கள். ராயல் மிண்ட் கொள்ளையின் தலைவனாக செயல்படும் பெர்லினுக்கு இது அதிருப்தி அளித்தாலும் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. காரணம் அவனுக்கும் அங்கு அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஒரு பெண்ணின் மீது முதலில் காமம் ஏற்பட்டு அதன்பின் அது காதலாகிறது. ஆனால் பெர்லினின் அந்தக் காதல் தோல்வியுறுகிறது. அந்தப் பெண் பயத்தில் அவனுக்கு இணங்கியிருந்தாலே தவிர அவன் மீது அவளுக்கு துளியும் காதல் இல்லை.
பெர்லினுக்கு எப்படி பிணைக்கதையின் மீது காதல் ஏற்பட்டதோ அதே போல ஒரு இக்கட்டான சூழலில் டென்வரும் மோனிகாவும் காதல் வயப்படுகிறார்கள். இதில் வித்யாசம் என்னவெனில் மோனிகாதான் அதை முதலில் வெளிப்படுத்துகிறாள். ஒருகட்டத்தில் இருவரும் ஓருடல் ஈருயிராகும் அளவுக்கு காதல் செழித்து வளர்கிறது. தனது பெயரை ஸ்டாக்ஹோம் என்று பின்னர் மாற்றிக் கொள்கிறாள் மோனிகா.
இன்னொரு புறம் மிக அழகான காதல் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. எந்தவொரு உறவையும் யாருடனும் வைத்துக் கொள்வது எமோஷனல் பாண்டிங்கை ஏற்படுத்திவிடும், அது இதுபோன்ற ஆபத்தான வேலையைச் செய்யும் போது சிக்கலாகிவிடும் என்பதை முன்கூட்டியே கணித்த புரொபஸர்தான் அது. அவர் காதலில் வீழ்வது அவருக்கு நேர் எதிரே செயல்படும் ஒரு பெண்ணின் மீது. போலீஸ் அதிகாரியான ரக்கேலும் , சால்வா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் செர்ஜியோ என்ற பெயருடைய புரொபஸரும், ராயல் மிண்ட் அருகே உள்ள ஒரு பாரில் அடிக்கடி சந்திக்க நேரிட, ஒரு கட்டத்தில் பேசத் தொடங்கி, பேச்சுக்கள் ஈர்ப்பில் முடிந்து, மிகக்குறுகிய காலத்தில் காதல் வயப்படுகிறார்கள்.
ரக்கேலின் வாழ்க்கை துயரமானது. குடும்ப வன்முறை காரணமாக கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஆறு வயது மகளுடனும் தாயுடனும் ஒரு வீட்டில் வசிக்கும் மத்திய வயது பெண் அவள். எப்போதும் இயந்திரம் போல உழைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு புரோபஸரின் அறிவார்ந்த பேச்சும், அன்பான அரவணைப்பும் தேவைப்படுகிறது. வெகு சீக்கிரத்தில் சேஃபியோசெக்ஷுவல் மனநிலைக்கு தள்ளப்படுகிறாள். ஒருவரின் புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்து அவர்களிடம் தஞ்சம் அடைவது சேஃபியோ செக்ஷுவல். காரணம் அவள் உடல் சார்ந்து ஈர்க்கப்படும் அளவுக்கு அவள் இளம் வயதினள் இல்லை.
இந்தப் பக்கம் புரொபஸரின் வாழ்க்கை தனிமை நிரம்பிய ஒன்று. அவரால் இயல்பாக யாருடனும் பழகிவிட முடியாது. மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் அவரால் உரையாட முடியும். தன்னை முழுமையாக ஒப்படைக்க முடியும். ரக்கேலிடம் இனம் தெரியாத பந்தத்தை அவர் ஆரம்பத்திலேயே உணரத் தொடங்க அது கட்டுக்கடங்காத காதலும் காமத்திலும் சென்றடைகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் வெகுகாலமாக நேசித்தவர்கள் போலவே ஒன்றிணைகிறார்கள்.
மொத்த போலீஸ் பட்டாளமும் ராயல் மிண்ட் அருகே கூடாரம் அடித்து தங்கி கொள்ளையர்களிடம் போராடி வருகிறது. ரக்கேலுக்கு இந்த கேஸ் மிகப் பெரிய சவாலாகிறது. தூக்கம் இழந்து மிகுந்த மன உளைச்சலுக்குள் அதனை கையாள்கிறாள். இதையெல்லாம் ரியோ உருவாக்கிக் கொடுத்திருந்த கம்யூட்டர் மூலம் ஒரு பக்கம் போலீஸாரின் செயல்பாடுகளை உளவு பார்த்துக் கொண்டும், இன்னொரு பக்கம் கொள்ளையின் அடுத்தடுத்த கட்டத்தை வடிவமைத்துக் கொண்டும் இருக்கிறார் புரொபஸர். ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன அடுத்து என்னவென்று பரபரப்புடன் இயங்குகிறது.
ஒரு கட்டத்தில் இந்தக் ஹைஸ்டுக்குக் காரணம் தான் மிகவும் நேசிக்கும் சால்வாதான் என்பதை ரக்கேல் கண்டுபிடித்துவிடுகிறாள். அதிர்ச்சியில் செயல் இழந்து போகிறாள். முந்தைய இரவுதான் அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றி சில முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆனால் புரொபஸரின் அசல் முகம் தெரிந்து, அவனை கொன்றுபோடும் அளவுக்கு கோவத்தில் துடிக்கிறாள். கொல்லவும் துணிகிறாள். ஆனால் அவளால் அவனை கொன்றுவிட முடிவதில்லை.
ரக்கேலின் மனம் முழுக்க அவனே நிறைந்திருக்கிறான். எது சரி எது தவறு என்று அவள் குழம்பிப் போகிறாள், கொள்ளை அடித்தாலும் அவர்களுக்குள் இருக்கும் கட்டுப்பாடுகள், அவர்களின் பின்புலம் என பலவற்றை அவதானித்து இறுதியில் லிஸ்பென் என்ற பெயருடன் புரொபஸரிடமே இணைகிறாள். இதனால் அவள் மிகவும் விரும்பி ஏற்ற காவல்துறை வேலை பறிபோவதுடன் கொள்ளைக்காரி என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள். ஆனால் காதலுக்கு கண் இருப்பதில்லை, அறிவு இயங்குவதில்லை....காதல் வயப்பட்ட இதயங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கும். அந்த துடிப்பு இந்த உலகம் உள்ளவரையிலும் கேட்டுக் கொண்டிருக்கும். அவ்வகையில் மணி ஹைஸ்டின் ஆகச் சிறந்த காதல் கதைகளுள் செர்ஜியோ மற்றும் ரக்கேலின் காதல் கவனத்தை ஈர்க்கிறது.
இந்தப் பின்னணியில் நெட்ப்ளிக்ஸில் அண்மையில் இந்த வெற்றித் தொடரின் நான்காவது சீஸன் வெளியானது. எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புடன் வந்திருந்தாலும், மற்ற மூன்று சீஸன்களை விட இது மாற்றுக் குறைவுதான். காரணம் மற்ற சீஸன்களில் காணக் கிடைத்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் இதில் அதிகமில்லை. நிறைய க்ளிஷேக்கள், மற்றும் புரொபஸர் உட்பட அனைவரின் இயங்கு விதமும் பார்க்வையாளர்களுக்கு பழகிப் போகிறது.
அடுத்து என்னவென்ற ஆச்சரியம் தோன்றாமல், இதுதானே செய்யப்போகிறார்கள் என்ற அலட்சியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனாலும் அதையும் மீறி சில அதிசயங்கள் இந்த சீஸசனில் இருக்கவே செய்தன. வசனங்களும், புதிய ஹைஸ்டான பேங்க் ஆஃப் ஸ்பெயினில் தங்கம் கடத்தத் துணியும் செயலும், போலீஸ் பிடித்துச் சென்ற ரியோவின் மீட்பும், ரேக்கலின் அரெஸ்ட் மற்றும் நைரோபியின் மரணம் என சில சுவாரஸ்யங்களை உருவாக்கின.
முதலில் ஆஸ்லோ, பின்னர் மாஸ்கோ, என இவர்கள் பக்கம் சிலர் மரணமடைய, முதல் சீஸன்களில் கனத்த இதயத்துடன் கொள்ளை அடித்த பணத்துடன் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிகிறார்கள். அதன் பின் ரியோ பிடிபட்டவுடன் தான் மீண்டும் இணைந்து புதிய திட்டத்தை துவக்குகிறார்கள். இதில் அவர்களுடன் இணைவது பெர்லினின் ஆத்ம நண்பன் பலோமா. இந்த ஹைஸ்டில் காவல் அதிகாரியாக ஒரு நிறைமாத கர்ப்பிணி அழைக்கப்படுகிறாள்.
அவள் பெயர் அலீஷியா. அவள்தான் புரொபஸரைக் கண்டுபிடிக்க ரியோவை தனிச் சிறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்தவள். ரேக்கலையும் பலமணி நேரம் இண்டாரகேஷன் செய்து வருபவள். இந்நிலையில் இவர்களை புரொபஸர் எப்படி மீட்டார் எப்படி ஹைஸ்டை வெற்றிகரமாக்குகிறார் என்பதெல்லாம் சில திருப்பங்களுடன் இந்த சீஸனில் சொல்லப்படுகிறது.
சாதாரணமாக ஆரம்பித்த ஒரு தொடர் அசாதாரண வெற்றி அடைவது சாதாரணம் இல்லைதானே? இந்த குவாரண்டைன் காலக்கட்டத்தில் மணி ஹைஸ்ட்டைப் போன்ற தொடர்கள் மனதை சோம்பிக் கிடக்காமல் செய்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் நம் புத்தியுடன், நம் விழிப்புணர்வு நிலையுடன், நம் காதல் சார்ந்த புரிதலுடன் அது உரசிச் செல்வதால் ஒரு தடவை பார்த்திருந்தாலும் மீண்டுமொருமுறை பார்க்கத் தூண்டுகிறது.