கொரோனா பாதிப்பு மக்களை நாளுக்கு நாள் அச்சத்தின் பிடியில் வைத்திருக்க, இந்தப் பிரச்னைகள் எப்போதுதான் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்கள் வாடியுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு சட்டத்தால் பலர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகினர். திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யுமாறு பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனாவால் திரைப்படத் துறை முடங்கிப் போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தைச் சேர்ந்த 25,000 உறுப்பினர்களில் 18,000 பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவசப் பொருட்களையும், பணத்தையும் இவர்களால் வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு பெப்ஸி மூலமாகவோ அல்லது திரைப்பட நல வாரியம் மூலமாகவோ அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். எங்கள் வேண்டுகோளை ஏற்று நல்லிதயம் கொண்டவர்கள் இதுவரை ரூபாய் 1,59,64,000 (ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்) மற்றும் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளார்கள். இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை.
25,000 தொழிலாலர்கள் உள்ள பாலிவுட்டில் சல்மான் கான், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.5,000 உதவிப்பணம் என ரூ.13 கோடியை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பிரபாஸ் ரூ. 4 கோடியும், பவண் கல்யாண் ரூ 2 கோடியும் நாகார்ஜுனா ரூ.1 கோடியும் கொடுத்துள்ளார்கள். தமிழ்த் திரைப்படத்துறையில் நல்ல நிலைமையில் உள்ள நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட திரைப்படத் துறையின் அனைத்து பிரிவினரும் திரைப்படத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நிதி வழங்குமாரு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகை நயன்தாரா பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.