கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர்,ராமன் ராகவ் 2.0, மண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், சேக்ரெட் கேம்ஸ், கூம்கேது போன்ற வெப் சீரீஸ்களும் நடித்துள்ள நவாஸுதின் சித்திக் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரவலான ரசிகர்களைக் கொண்டுள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
கரோனா பிரச்சனையால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் நவாஸுதின் தன் குடும்பத்துடன் மும்பை வீட்டில் இருந்தார். தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நவாஸ் தனது சொந்த ஊரான புதனாவுக்குச் செல்ல விரும்பினார்.
மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகளிடமிருந்து பயணத்திற்கு தேவையான அனுமதி பெற்ற பின்னர் நவாஸுதின் சித்திக் தனது குடும்பத்தாருடன் சனிக்கிழமை அன்று சொந்த ஊரை அடைந்தார். பயணத்துக்கு முன் அவருக்கும் குடும்பத்தினருக்கும் COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று அவர்கள் யாருக்கும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவாஸுதீன் குடும்பத்தாருடன் 14 நாள்கள் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நவாஸுதீன் சித்திக்கின் சகோதரர் அயாஸுதீன் சித்திக் இது பற்றிக் கூறுகையில், ''நவாஸுதின் சித்திக் தனது குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையை அனுசரித்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மேலும் அவர் குடும்பத்தாரைத் தவிர்த்து வேறு யாரையும் சந்திக்க மாட்டார்’' என்றார்.