உலகத்தையே கொரோனா வைரஸ் பிரச்சனை அச்சுறுத்தி வந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் 144 தடை உத்தரவு போட்டுள்ளதால் மக்கள் வீட்டில் பத்திரமாக உள்ளனர்.
இந்நிலையில் பொழுதுபோக்குவதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், OTT platform உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இயங்கி வருகின்றனர்.
இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட இமேஜ் அது. தற்போது இந்தப் படம் இணையத்தில் பரவி வருகிறது.
இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பது, ‘இந்தப் படத்தை FB-ல பார்த்தேன், இதை யார் டிசைன் செஞ்சிருந்தாலும் அவங்களுக்கு - மதச்சார்பற்ற இந்திய நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அவர். சாதி / மத வேறுபாடுகள் இல்லாம மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கு. நாட்டின் பிரதமரை இப்படி சித்தரிக்கும் படமும், பிரச்சாரமும் கண்டிக்கத்தக்கது! நானும் ஆஞ்சநேயரோட பரம பக்தைதான், ஆனா இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்க மாட்டேன்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். அவர் விரிவாக அளித்த பதில், "இந்தப் படம் மக்களுக்கு தவறான செய்தியை பரப்புதுன்னு நினைக்கறேன். நரேந்திர மோடி அவர்கள் ஒரு தனிநபர் மட்டும் இல்லை, மதச்சார்பில்லாத நம்ம நாட்டோட பிரதமர் அவர். சாதி, மத வேறுபாடுகள் எல்லாத்தையும் தாண்டி, மக்கள் அவர் மேல நம்பிக்கை வைக்கணும். இந்தக் கஷ்டமான காலகட்டத்துல நமக்கு ஒரு உண்மையான தலைவர் தேவை, ஒரு உண்மையான தலைவர் எப்பவுமே மதச்சார்பில்லாதவர்.
அதிகம் மக்கள் இயங்கக் கூடிய சோஷியல் மீடியாவில் இது போன்ற தவறான செய்திகள் வெளியிடப்படறதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. நான் சென்னையில பிஜேபி ஆபிஸுக்கு போயிருக்கேன். அங்க கட்சி நடவடிக்கைகள்ல பல முஸ்லிம்கள் தீவிரமாக பங்கு வகிக்கறதைப் பார்த்து, உண்மையில் ஆச்சரியப்பட்டேன். பொதுபுத்திலேர்ந்து பார்க்கறப்ப, நாம பல தடவை தவறான தகவல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம்.
மேற்சொன்ன பதிவைப் பத்தி எடுத்துச் சொல்லறது எனது முஸ்லிம் மற்றும் கிருத்துவ சகோதர சகோதரிகளுக்கு நான் செய்யக் கூடிய கடமையாக நினைக்கிறேன். என்னோட வாழ்க்கைல நான் கடைபிடிக்கறது இந்துமதம். நானும் தீவிரமான அனுமன் பக்தைதான். ஆஞ்சநேயர்தான் எனக்கு எல்லாமே! தூக்கத்தில் கூட ஜெய் ஸ்ரீராம்-னுதான் சொல்வேன் அதே சமயம் இன்ஷா அல்லாஹ் என்பதையும் சமமாக பாவிக்கிறேன். எல்லாமே அன்பில் நிறைந்த, இறைமையில் தோய்ந்த வார்த்தைகள். அதுக்கான அர்த்தங்களும் ஒண்ணுதாங்கறதை எப்பவும் நம்பறேன்’ என்று கூறினார்.
Saw this pic in FB, whoever made this- He is the elected PrimeMinister of secular State INDIA, has responsibility of giving confidence to people irrespective of caste/ creed. Display/ propaganda of sorts is getting disgusting! BTW I am a Hanuman Bhakth, but won’t encourage this🙏 pic.twitter.com/YiyzTAKfSl
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 13, 2020
இந்தத் தெளிவு இருந்தால், இதுபோன்ற படங்களை வெளியிட்டு, சோஷியல் மீடியாவில் விஷத்தை விதைக்க மாட்டார்கள்.