கேப்டன் விஜயகாந்தின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக இலங்கையை சேர்ந்த சாஷ்வி பாலா நடித்துள்ளார். மேலும், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கவிராஜ் இயக்கும் இப்படத்தை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரிக்கிறார். கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
நியு ஏஜ் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபல இயக்குநர் அமீர் தனது நண்பரும், இயக்குநர் பாலாவுடனான நட்பு முறிந்தது குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “விஜயகாந்திற்கு 'கேப்டன்' என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமீர், “திரைத்துறையில் புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்” என்று பேசினார்.