இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா, கரு.பழனியப்பன், கௌசல்யா ஆர்ஜே விக்னேஷ்காந்த், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'நட்பே துணை'.
இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, அரவிந்த் சிங் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் கரு.பழனியப்பன் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஒரு படம் நடித்துவிட்டு இனி நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தேன். அப்போது சுந்தர்.சி அழைத்து ஆதி நடிக்கும் படத்தில் நடிக்க விருப்பமா ? இந்த படத்தின் கதையை ஒருவர் சொல்லுவார் கேளுங்க என்றார். நான் சுந்தர்.சி மேலுள்ள நம்பிக்கையில் அதெல்லாம் வேண்டாம் நடிக்கிறேன் என்றேன்.
இல்லை அந்த வேடம் கொஞ்சம் எதிர்மறையான வேடம் என்று தயங்கினார். அப்போது நான் சொன்னேன் நான் சினிமாவில் நடித்து அதனால் கிடைக்கும் பிரபலத் தன்மையினால் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆகப்போவதில்லை. எனக்கு இமேஜ் எங்க இருக்கு. நான் மிகவும் நேர்மையானவன். ஒழுக்கமானவன். நான் நிரூபிக்க வேண்டியது என் குடும்பத்தாருக்கு மட்டுமே என்றார்.
மேலும் இந்த படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு எல்லோருக்குமே மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது இந்த படத்தின் கதாநாயகன் ஆதி தான். எல்லோருடைய யோசனைகளையும் கேட்கக்கூடியவர். சூட்டிங் ஸ்பாட்டே, டிஷ்கஷன் ஸ்பாட் போன்று இருக்கும்.
பாக்கியராஜ் பார்த்திபன் தொடங்கி என் சமகாலத்து இயக்குநர் வரைக்கும் எல்லோருமே ஸ்கிரிப்டை முழுவதுமாக முடித்துவிட்டு ஷூட்டிங் செல்வோம். ஸ்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் இங்கு காட்சிக்கு காட்சி வசனங்கள் உள்ளிட்டவைகள் மாறுகிறது. ஆனால் அது ஒரு படத்துக்கு இவ்வளவு வளம் சேர்க்கும் என்பது முழு படமாக பார்க்கும் போது தான் தெரிந்தது. என்றார்.