'2 தமிழ்நாட்டை நடத்தலாம்!'.. கட்சி பிரச்சாரத்தில் கமலின் வைரல் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்களின் பெயர் மற்றும் தொகுதிப் பட்டியலை கமல்ஹாசன் முன்னதாக வெளியிட்டிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என முன்பே தெரிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சொன்னபடி மனுதாக்கல் செய்ததோடு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிமுகப்படுத்தியதோடு, பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் நிற்கும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரான ரங்கராஜனை ஆதரித்து கமல் அக்கட்சியின் தலைவர் பேசியபோது, தொழில் புரியும் மக்களை தங்கள் பூர்வ இடங்களில் இருந்து புலம் பெயரச் சொல்லி செம்மஞ்சேரியில் உள்ள ஒழுகும் கூரைகளுக்கு அடியில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதற்கு எழில் நகரம் என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய கமல், இதுதான் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறியும்போது தனக்கு கிடைத்த தகவல் என்றும் கூறினார்.
மேலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் ரங்கராஜன் கலெக்டர் மக்கள் பணிக்காக கலெக்டர் பணியைத் துறந்தவர் என்றும் மக்களின் வாழ்வை மாற்றி அனைவரின் வீட்டுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட தங்கள் கடமைகளைச் செய்வோம் என்றும் கமல் கூறினார்.
அதோடு நீர்நிலைகளை பராமரித்தாலே அவ்வாறு ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கொடுக்க முடியும் என்பதோடு, இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், இப்போது திருடப்படும் பணத்தை தடுத்தாலே, 2 தமிழ்நாட்டை நடத்துவதற்கான திட்டங்களை அறிவார்ந்த தமிழர்கள் கொண்டு வகுக்கலாம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல், செய்வோம் என பலரும் சொல்கின்றனர். ஆனால் எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறியவர் தமிழனுக்கு சொல்லித்தர வேண்டியவை குறைவு என்றும்,அவனுக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்றும் அதை நாம் பயன்படுத்தத் தவறியதாகவும் கூறினார்.