மெரினாவில் பீதி: 8 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து கரையொதுங்கிய 3 சடலங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலை நேரங்களில் நிகழும் அசம்பாவிதங்கள் பலரும் அறிந்தவைதான். தனியே மாட்டிக்கொள்பவர்கள் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவடுவதும், திட்டம் தீட்டப்பட்டு முறையற்ற நேரங்களில் மெரினாவுக்கு அழைத்துவரப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் கடந்த வருடங்கள் நிகழ்ந்தன.
எனினும் போலீஸாரின் தீவிர கண்காணிப்புகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பிறகு இந்த குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. அதே சமயம் 8 மணி நேர இடைவெளியில் 3 சடலங்கள் அடுத்தடுத்து கரையொதுகியுள்ள சம்பவம் சென்னை மற்றும் மெரினாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
நேற்றைய தினம் காலை நேரத்தில் மெரினா கடற்கரையின் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் சுமார் 30 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே, அதாவது காலை 11 மணி அளவில் எம்ஜிஆர் நினைவு சமாதியின் பின்புறம் கண்ணன் என்கிற பொறியியல் மாணவரின் சடலம் கரையொதுங்கியது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதற்கும் பிறகு அனைவரையும் பதைபதைக்கவைக்கும் விதமாக மதியத்துக்கு மேல் சுமார் 3 மணியளவில் ஜெயசந்திரன் என்பவர் தனது நண்பர்களுடன் விளையாண்டு கொண்டிருக்கும்போது அலையில் சிக்கி, கடலால் உயிர் உறிஞ்சப்பட்டு கரையில் ஒதுக்கப்பட்டார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேரின் உயிர் குடித்தது மெரினா கடற்கரைதானா அல்லது ஜெயச்சந்திரனை தவிர மீதமுள்ள இருவர் எப்படி இறந்தார்கள் உள்ளிட்ட விபரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் பகல் நேரத்தில் பலர் முன்னிலையில் நடந்துள்ள இத்தகைய சம்பவங்கள் பலரையும் இனம் புரியாத அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.