சிதம்பரத்தில் '10 ஆயிரம் பேர் பங்குபெற்ற நாட்டியாஞ்சலி': கின்னஸ் சாதனை புரிந்த கலைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரே நேரத்தில் 10 ஆயிரம் நடனக் கலைஞர்கள் ஒன்றாக ஒரே மாதிரியான ஆடையணிகலன்கள் அணிந்து நடனமாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர் .
மஹாசிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் தில்லை அம்பலவாணன் நடராஜர் ஆலயத்தில் வருடா வருடம் தொடர்ந்து ஒருவாரம் நாட்டியாஞ்சலி நடப்பது வழக்கம். நடனக்கலையில் அண்டசராசரத்தை அளந்தவர் என்று ஐதீகம் கொள்ளப்படும் ஆடல் அரசர் என்கிற சிதம்பரம் நடராஜ பெருமானின் முன்னிலையில் வருடந்தோறும் தவறாமல் நடனக்கலைகளை புரியும் ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள் இந்த கின்னஸ் சாதனைக்கான நடன நிகழ்வில் பங்கேற்றனர்.
ஏறத்தாழ 10 ஆயிரம் நடனமாடும் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பெரும்பாலான வளரிளம் பெண்கள் கலந்துகொண்டதோடு அனைவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து ஒரே ஸ்தாயியில் நடனமாடி கின்னஸ் சாதனையில் இடம் பெறும் நோக்கில் இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக 18 நிமிடங்கள் வரை நடந்த இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. இந்த கின்னஸ் சாதனைக்கான உலக கின்னஸ் சான்றிதழினை, இங்கிலாந்து நாட்டின் ரிஷிநாத் நேரில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கண்ட பின் வழங்கியுள்ளார்.
முன்னதாக கடந்த 2017-ஆம் வருடம், சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 4, 525 மாணவர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தினர்.