‘மெர்சல் பட பாணியில் 2 ரூபாய் டாக்டர்’.. இறப்புக்கு பின் தொடரும் நெகிழ்ச்சிகரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தான் இறக்கும்வரை நோயாளிகளிடம் வெறும் 2 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவம் செய்த மருத்துவரின் சேவையை அவரது குடும்பத்தார் தொடரும் தகவல் வெளியாகி நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையில் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்பவர் கிளீனிக் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளிடம் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவர் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்.
இதனை அடுத்து இவரின் மருத்துவர் சேவையை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வருகின்றனர். மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவி வேணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது குரோம்பேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
ஜெயச்சந்திரனின் மருத்துவ சேவையை தொடர்வது குறித்து அவரது குடும்பத்தினர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், ‘என் கணவரின் மருத்துவ சேவை முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் மீண்டும் இந்த மருத்துவ சேவையை தொடர்ந்து வருகிறோம்’ என ஜெயச்சந்திரனின் மனைவி மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நான் அப்பாவுடன் இருந்து பல நாட்கள் மருத்துவம் பார்த்துள்ளேன். அவர் இறந்த பின் அவரைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க வந்ததைப் பார்த்த பின்பு என் அப்பாவின் மருத்துவ சேவையின் மகத்துவம் புரிந்தது’ என மருத்துவர் ஜெயச்சந்திரனின் மகன் சர்த் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உதவிப் பேராசியராக இருந்து வருகிறார்.
க்ளினிக் வரும் நோயாளிகளிடம் பணம் வாங்கிவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நோயாளிகள், தங்களால் முடிந்த இரண்டு ரூபாயோ, மூன்று ரூபாயோ தனது தந்தையின் படத்தின் முன் உள்ள உண்டியலில் போட்டுவிட்டு செல்வதாகவும் சரத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஜெயச்சந்திரனின் மருத்துவ சேவையை, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.