அதிகாரி முன் நடந்த அடிதடி சம்பவம்.. வேட்புமனுத் தாக்கலின்போது பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வேட்பு மனு பரிசீலனையின்போது இருதரப்பு வேட்பாளர்களிடையே வாக்குவாதம் முற்றி, அடிதடியில் முடிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரி முன் நடந்த அடிதடி சம்பவம்.. வேட்புமனுத் தாக்கலின்போது பரபரப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று வேட்புமனு மீதான பரிசீலனைகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஒரே ஒரு தொகுதியான பெரம்பூரில் வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கியது. அப்போது முதலே, வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வாக்குவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

காலையில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் பிரியதர்ஷினியின் வேட்புமனுவில் பிழை உள்ளதாகக் கூறி அ.தி.மு.க. ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் கடும் அமளிதுமளியில் ஈடுபட்டனர். அதன் பின்பு வெற்றிவேலுவின் வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியதும், மீண்டும் அதே அ.தி.மு.க. ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவரது வேட்புமனு மீதான பரிசீலனை இறுதியாக மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அ.தி.மு.க.வினர் வெற்றிவேலுவின் வேட்புமனுவில் பிழை உள்ளதாகக் கூறி அதைத் தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கூச்சலிட்டனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர், வெற்றிவேல் வேட்புமனு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையிலேயே அ.ம.மு.க.வினர் மீது தாக்கும் வகையில் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்வி அமளியில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வாக்குவாதத்தில் தொடங்கிய வேட்பு மனு பரிசீலனை கடைசியில் அடிதடியில் முடிந்தது.

#CLASH, LOKSABHAELECTION2019, #TAMILNADU