'ஓடும் காரில் 'கால் டாக்ஸி' டிரைவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்
By |

சென்னையில் சவாரி வந்த நபர்களே கால் டாக்ஸி  டிரைவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஓடும் காரில் 'கால் டாக்ஸி' டிரைவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்பவர் கோபிநாத்.சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவருக்கு,நேற்று முன்தினம் இரவு சவாரி ஒன்று வந்துள்ளது.இரவு நேரம் என்பதால் சவாரியை எடுக்க வேண்டாம் என நினைத்த அவர்,தான் கார் ஓட்டும் நிறுவனத்தின் மூலமாக அந்த சவாரி வந்ததால் சென்னையை அடுத்து கும்மிடிப்பூண்டிக்கு சென்றார்.அங்கு சவாரியை புக்கிங் செய்த 3 பேரும் காரில் ஏறிக்கொண்டனர்.இதனையடுத்து கார் சிறிது நேரம் சென்றதும்,ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் காரை மூவரும் நிறுத்த சொல்லியுள்ளனர்.

காரை கோபிநாத் நிறுத்தியதும், 3 பேரும் பெரிய கத்தியைக் காட்டி அந்த டிரைவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் காரை பிடுங்கியுள்ளனர். அத்துடன் அவரை கொலை செய்யவும் முயன்றுள்ளனர்.இதனை சற்றும் எதிர்பாராத கோபிநாத் அதிர்ச்சியில் உறைந்து போனார்.உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த அவர்,சாலையில் பைக்கில் வந்த இருவரிடம் உதவி கேட்டுள்ளார்.உடனே பைக்கில் இருந்து இறங்கிய இருவரும் கோபிநாத்தை மடக்கி பிடிக்க என்ன நடக்கிறது என புரியாமல் திகைத்து போனார்.பைக்கில் வந்த இருவரும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் என்பது பின்புதான் அவருக்கு புரிந்தது.

இதனையடுத்து கொள்ளையர்கள் அவரை காரில் ஏற்றி கொண்டு கிளம்ப,கெட்னமல்லி என்ற இடத்திற்கு அருகில் வரும் போது,கோபிநாத் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.இதையடுத்து காருக்குள் நடந்த மோதலில் கொள்ளையர்களில் ஒருவன் கீழே விழ,காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவியும் உடைந்தது.

இதனிடையே  படுகாயம் அடைந்த கோபிநாத் அருகில் இருந்த ஊருக்குள் ஓடி ,அங்கிருந்த தனியார் நிறுனத்தின் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை டி.எஸ்.பி கல்பனா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்தார்.உடனே களத்தில் இறங்கிய காவல்துறையினர் இரவோடு இரவாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

இந்நிலையில் அடுத்த நாள் அந்த கொள்ளையர்கள் காருடன் பிடிபட்டுள்ளனர்.கொள்ளையர்களில் முக்கிய குற்றவாளியின் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று பலரிடம் அந்தக் கும்பல் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.இந்த சம்பவம் கால் டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ROBBERY, CHENNAI CALL TAXI, DRIVER, FASTTRACK