‘உங்கள மாதிரி இளைஞர்கள்தான் தேவைன்னு சொன்னார் அபிநந்தன் அண்ணா’.. நெகிழும் ஃபசூல்!
முகப்பு > செய்திகள் > கதைகள்புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவ விமானி அபிநந்தன் இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதல் பணியைச்செய்யச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது நிகழ்ந்த அனுபவத்தை செங்கல்பட்டை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஃபசூல் ரகுமான் பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார். முன்னதாக டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடம் மாதம் 1 ரூபாய் வசூலித்து அதில் வருடத்துக்கு கிடைக்கும் 798 கோடி ரூபாயை ஈட்டி ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்காக கொடுக்கலாம் என்கிற தனது யோசனையை பிரதமருக்கு கடிதமாக எழுதி, பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் முப்படைத் தலைவர்களால் நேரில் அழைக்கப்பட்டு பாராட்டுப் பெற்றதால் பிரபலமானவர் ஃபசூல்.
சிறுவயதில் இருந்தே விமானப்படை தளபதியாக வேண்டும் என்று ஆசைகொண்டிருந்த ஃபசூல் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது செங்கல்பட்டு நிகழ்ச்சிக்கு அப்போதைய ஏர் மார்ஷலான (அபிநந்தனின் தந்தை) வர்த்தமான் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவரை பார்த்ததும் இன்ஸ்பிரேஷனில் அவரிடம் போய் தனது ஆசையைச் ஃபசூல் கூறியுள்ளார். அப்போது ஃபசூலை ஊக்கப்படுத்தி தன்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என அனுமதி கொடுத்ததன் பின்னர் ஃபசூல் வர்த்தமானின் பெரும்பாலான நிகழ்வுகளை அட்டென் செய்து அவரிடம், தனது சகல சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றிருக்கிறார்.
அப்படி ஒரு முறை வர்த்தமானின் வீட்டுக்குச் சென்றபோது அபிநந்தனையும் சந்தித்திருக்கிறார் ஃபசூல். ‘அப்போது என்னிடம் பேசிய அபிநந்தன் அண்ணா உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் நாட்டுக்குத் தேவைன்னு சொன்னார்’ என்று சொல்லி நெகிழ்கிறார் ஃபசூல். அதன் பின்னர் தனக்கு இன்ஸ்பிரேஷனாகவும் தன் ஒவ்வொரு நகர்விலும் பங்களிப்பை தரும் வர்த்தமான் அவர்களின் மகனுமான அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டதால், தான் மனமுடைந்து பயம் கொண்டதாகவும் அவர் பத்திரமாக திரும்பி வரவேண்டும் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அபிநந்தன் தாயகம் திரும்பியதும்தான் நிம்மதி உண்டானதாகக் கூறும் ஃபசூல், ‘சென்னைக்கு அபிநந்தன் அண்ணா வந்தால் முதல் ஆளாக போய் பார்த்துவிடத் துடிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.