மக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லா காலங்களிலுமே திரைக் கலைஞர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பது உண்டு.
அவ்வகையில் இந்த தேர்தலிலும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். முன்னதாக ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த நடிகையும் மறைந்த கன்னட நடிகருமான அம்பரீஷின் மனைவியுமான நடிகை சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால் இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மகனை அந்த தொகுதியில் இறக்கியவர், அதே தொகுதியில், சுயேச்சையாக தான் நிற்கவிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்நீத் கவுர். தமிழ், இந்தி , தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் மும்பையைச் சேர்நதவர். இவர் கடந்த 2011- ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்துக்குட்பட்ட பட்னோரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏவான ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டவர்.
இந்நிலையில் இவரது கணவர் ரவி ராணாவின் புதிய கட்சியான யுவா ஸ்வாபிமான் கட்சி சார்பில் காங்கிரஸ் கூட்டணியில் அமராவதி தொகுதியில் நவ்நீத் கவுர் போட்டியிடுகிறார். முன்னதாக 2014-ஆம் வருடம் சிவசேனா வேட்பாளர் ஆனந்த் ராவ் அட்சுல்லுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நவ்நீத் கவுர் தோல்வியடைந்திருந்தார்.
இந்த வரிசையில் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஜெயப்பிரதா பாஜகவில் இணைகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர், கருத்துவேறுபாடு காரணமாக விலகி, சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து 2004, 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் உத்திர பிரதேசத்தின் ராம்பூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறிய அவர், அக்கட்சியில் இருந்து 2010-ஆம் ஆண்டு வெளியேறினார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி நிற்கும் அதே தொகுதியில் பாஜகவின் சார்பாக ஜெயப்பிரதா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.