550 கோடி ரூபாய் கடனில் தம்பி அம்பானி.. தக்க தருணத்தில் உதவிய அண்ணன் அம்பானி!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

என்னதான் உடன் பிறந்திருந்தாலும், பணம் வந்தால் பத்தும் பறந்து சென்றுவிடும் என்பார்கள்.

550 கோடி ரூபாய் கடனில் தம்பி அம்பானி.. தக்க தருணத்தில் உதவிய அண்ணன் அம்பானி!

ஆனால் பணம் இல்லாதபோது, நம்மிடம் பகையுடன் இருந்த ஒரு உறவு கைகொடுத்தால், அதுவும் உடன்பிறந்தோரின் உறவாய் இருந்தால், அப்போது வாழ்க்கையில் மனிதர்களின் மீதான மதிப்பீடு புரிய வரும். அப்படி உறவுகளின் உன்னதத்தை உலகிற்கே உதாரணமாய் எடுத்துச் சொன்ன சம்பவங்களின் வரிசையில் தற்போது அரங்கேறியிருப்பதுதான், முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்கு செய்துள்ள பெரும் உதவி.

ஸ்வீடனில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் எரிக்ஸன் எனும் நிறுவனத்திடம் இருந்து பலகோடி மதிப்பிலான சாதனங்களை விலைக்கு வாங்கியது அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம். ஆனால் அதற்கான தொகையை முழுமையாக செலுத்தத் தவறியதால் அதிருப்தியான எரிக்ஸன் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்குப் பிறகு, இவ்வழக்கில் அனில் அம்பானியை குற்றவாளியாக அறிவித்தது உச்சநீதிமன்றம். எனினும் எரிக்ஸன் நிறுவனத்துக்குத் தரவேண்டிய தொகையை தீர்ப்பில் இருந்து 4 வார காலத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடைசி நாள் மார்ச் 20-ஆம் தேதிதான்.  ஆக, உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிவடையும் தருணத்தில், முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தச் சொல்லி எரிக்ஸன் நிறுவனம் அழுத்தம் கொடுத்தது. ஆனால் அனில் அம்பானி இந்த கடனை எப்படி செலுத்தப் போகிறார் என பிசினஸ் உலகமே ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு முக்கிய செய்திக் குறிப்பினை வெளியிட்டார். அதன்படி, ‘உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வழங்க வேண்டிய 550 கோடி ரூபாய் தொகை வட்டியும் முதலுமாக முதலில் 118 கோடி ரூபாயும் மற்றும் தற்போது 462 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டது’ என்று செய்திகள் வெளியாகின.

இதுபற்றி பேசிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, இது தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் ஸ்தாபனங்களுக்கும் மாபெரும் நெருக்கடியான தருணம் என்றும், இதனை வெகு இயல்பாகக் கடந்து போகும் திடகாத்திரத்தை தங்களுக்குத் தரும் வகையில், தனது  மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி தனக்கு உதவியதால், தன்னோடு தோளாடு தோள் நின்றதாகவும், அவருக்கும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் தன் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்ததோடு, தானும் தன் குடும்பமும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்றும் கூறினார். இந்த தருணத்தில் தங்களுக்கு உதவியதால் தன் அண்ணன் முகேஷ் அம்பானி, குடும்ப உறவுகள் இன்னும் மேம்பட்ட மனித மாண்புகளுடனும், வலுவான குடும்ப மதிப்பீடுகளுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக நெகிழ்ந்துள்ளார்.

ANILAMBANI, MUKESHAMBANI, RCOM, NITAAMBANI, ERICSSON