காலியான சாலையில் ‘முகமூடியுடன்’ கிடந்த சடலத்தால் ‘அதிர்ச்சி’... ‘கொரோனா’ பாதிப்பால் இறந்தவரா?... ‘அச்சத்தில்’ பொதுமக்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்வுஹான் நகரின் காலியான ஒரு சாலையில் முகமூடி அணிந்த ஒருவருடைய சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பொதுவாகவே நெரிசலாக இருக்கும் பகுதியான வுஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே அங்கு வந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், காலியான சாலை ஒன்றில் முகமூடி அணிந்த ஆண் ஒருவருடைய சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அந்த சடலத்தை ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வியாழன் அன்று காலை பார்த்துள்ளனர். அப்போது சடலத்தைப் பார்த்த ஒரு சிலரும் அச்சத்தில் அருகில் செல்லாமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு எமர்ஜென்சி வாகனத்தில் வந்தவர்கள் சடலத்தின் மீது போர்வையைப் போர்த்திவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் போலீசார் சூப்பர் மார்க்கெட் கார்ட்போர்ட் பெட்டிகள் மூலம் அந்த இடத்தை மறைத்துள்ளனர். அதே வழியில் நிறைய ஆம்புலன்ஸ்கள் சென்றாலும் யாரும் அந்த சடலத்தை எடுத்துச் செல்லாத நிலையில், கடைசியாக அங்கு வந்த வெள்ளை வேன் ஒன்று சடலத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் எப்படி, எதனால் இறந்தார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர் கொரோனா பாதிப்பால் இறந்திருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவி வருகிறது. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் 213 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல் காரணமாக சிலர் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.