இங்கிலாந்தில் 5 குழந்தைகளுக்கு தாயான ஒருவர், கணவருக்கு தெரியாமல் உணவுக்கு பதிலாக 15 வருடங்களாக டால்காம் பவுடரை சாப்பிட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் 44 வயதான லிசா ஆண்டர்சன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு, தனது 5-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது இளைய மகன் பிறந்த சில நாள்களில், குழந்தைக்கு டால்காம் பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, அதன் வாசனை பிடித்துப்போக அன்று முதல், தனது கணவருக்கு தெரியாமல், குளியலறை சென்று டால்காம் பவுடரை சாப்பிட ஆரம்பித்துள்ளார். பின்னர் இதற்கு அடிமையான அவர், ஒரு நாளைக்கு குறைந்தது 200 கிராம் பாட்டில் அடங்கிய டால்காம் பவுடரை அரை மணிநேரத்திற்கு ஒருமுறை குளியலறைக்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளார்.
டால்காம் பவுடரை சாப்பிடாமல் தன்னால் இருக்க முடியாது எனத் தெரிவிக்கும் லிசா, இதனை சாப்பிடுவற்காகவே இரவில் 4 முறை எழுந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 8,000 பவுண்ட் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய்) டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தனது இந்த விசித்திர பழக்கத்தை கணவருக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த லிசா, ஒருமுறை இரவில் குளியலறைக்கு சென்று பவுடர் சாப்பிடுவதை கணவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதன்பின்பு லிசா மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடியுள்ளார். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தரப்பில், உணவில்லாத பொருட்கள் மீதான ஈர்ப்பு சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். டால்கம் பவுடர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், சுவாசிப்பதாலும் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் என குறிப்பிடும் நிலையில் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ தரப்பில் கூறியுள்ளனர். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.