Darbar USA

சட்டப்பேரவை கூட்டத் தொடர்... கவர்னர் உரையை கிழித்த ஜெ.அன்பழகன் சஸ்பெண்ட்... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகர் முன்பு வீசியதால் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் நடப்பு கூட்டத்தொடரில் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத் தொடர்... கவர்னர் உரையை கிழித்த ஜெ.அன்பழகன் சஸ்பெண்ட்... விபரங்கள் உள்ளே!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், அமைச்சர் வேலுமணியை ஒருமையில் பேசியதால், அவையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகனை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், ஜெ.அன்பழகனை விரைவில் பேசி முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெ.அன்பழகன், சபாநாயகர் மேஜை முன் சென்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஆளுநர் உரையை கிழித்து வீசி எறிந்தார். இதனால் கோபமடைந்த சபாநாயகர், ஜெ.அன்பழகன் மீதான தீர்மானத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்த, அதனை ஏற்று அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்தார். தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவை விதிமுறைகளை மீறியதாலும், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், வரும் கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், இந்த நடவடிக்கை திட்டமிட்டது போல் தெரிவதாக பேசினார். அதேபோல் 2 நாட்களுக்கு மட்டும் தடைவிதிக்க வேண்டும் எனவும், அடுத்து வரக்கூடிய கூட்டத்தொடரில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதன்பின்னர், ஜெ.அன்பழகன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை, 3 நாளாக குறைத்து, வரும் 9-ம் தேதி வரை ஜெ.அன்பழகன் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம பேசிய ஜெ.அன்பழகன், ‘சபாநாயகரிடம் சென்று, நான் தயாரித்த குறிப்புகளைக் காட்டி, இன்னும் 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அதனால் தான், ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன்’ எனத் தெரிவித்தார்.