“இப்படியும் மனிதர்கள் உண்டா!....பார்க்கிங் ஊழியரை காரில் இருந்து கீழே தள்ளும் கார் ஓட்டுநர்”... அட இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் பார்க்கிங் கட்டணத்தை கொடுக்காததால் காரின் முன்புறம் அமர்ந்து பார்க்கிங் ஊழியர் ஒருவர் காரை வழிமறிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் அல் சஃபோ மரினா என்ற சாலையில் பெண் ஒருவர் காரை சிக்னலில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த பார்க்கிங் ஊழியர் ஒருவர் காரின் முன்புறம் ஏறி அமர்ந்து கொண்டார். இதையடுத்து அப்பெண் காரை முன்னால் நகர்த்தி அந்த பார்க்கிங் ஊழியரை கீழே தள்ளினார். ஆனால் கீழே விழுந்த அந்த ஊழியர் மீண்டும் காரின் முன்புறம் ஏறி கொண்டு காரை வழிமறித்தார்.
இதைப்பார்த்து கொண்டு அந்த சிக்னலின் மறுபுறம் நின்ற இளைஞர் இச்சம்பவத்தை தனது மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இச்சம்பவம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சம்பந்தபட்டவர்களை கண்டறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், விசாரணையின் போது அப்பெண் காரை நிறுத்திவிட்டு அதற்கான பார்க்கிங் கார்டை கொடுக்காமல் சென்றுவிட்டதாகவும் அதனால் தான் காரை வழிமறிக்க அவ்வாறு செய்ததாகவும் பார்க்கிங் ஊழியர் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தான் சரியான கார்டையே அளித்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இனிமேல் செய்யக்கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அந்த இருவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.