காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குகம்பி.. உயிருக்குப் போராடிய சிறுத்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீலகிரியில் காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குக் கம்பியில் சிக்கி, பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குகம்பி.. உயிருக்குப் போராடிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்துக்குட்பட்ட இடத்தில் உள்ளது மஞ்சக்கம்பை கோட்டக்கல் தேயிலைத் தோட்டம். இங்கு, சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்தை நேரில் சென்று பார்த்த வனத்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம்,  சுருக்குக் கம்பியில் வயிற்றுப் பகுதி சிக்கி இறந்து கிடந்தது சிறுத்தை. அதன்பின்னர் உடனடியாக வனத்துறை ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையை வந்து நேரில் பார்த்ததில், இறந்தது பெண் சிறுத்தை என்றும் 3 முதல் 4 வயதுவரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சுருக்குக் கம்பியில் சிக்கி பல மணி நேரம் போராடிய பின் இறந்திருப்பது  ஆய்வில் தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தையின் உடலை வனத்துறை அதிகாரிகள் எரியூட்டினர். இதனைத் தொடர்ந்து  வனத்துறையினர், உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த 54 வயதான ராஜேந்திரன் என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதன்பின்னர், ராஜேந்திரனைப் பிடித்து விசாரித்தனர்.

இதில் முயல், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பிடிக்க ராஜேந்திரன் சுருக்கு வைத்துள்ளது தெரியவந்தது. அந்த சுருக்கில் பெண் சிறுத்தை எதிர்பாரதவிதமாக சிக்கி இறந்தது உறுதியானது. உடனடியாக ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவுசெய்து அவரை கைதுசெய்தனர்.

LEOPARD, ARRESTED, NILGIRIS