டி.வி.யில் அதிபராக நடித்த காமெடி நடிகர்.. நிஜத்தில் நாட்டின் அதிபரான சுவாரஸ்யம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தொலைக்காட்சி தொடரில் அதிபராக நடித்த காமெடி நடிகர், நிஜத்தில் உக்ரைன் நாட்டின் அதிபராகி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

டி.வி.யில் அதிபராக நடித்த காமெடி நடிகர்.. நிஜத்தில் நாட்டின் அதிபரான சுவாரஸ்யம்!

உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ போரோஷெங்கோவின், பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைவதையொட்டி அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பெட்ரோ போரோஷெங்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரான வோலோதிமிர் ஜெலன்ஸ்கி  களம் இறங்கினார்.

இந்தச் சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில், உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஆனால்  முதல் சுற்று தேர்தலின் போது எந்த வேட்பாளரும், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

இதனையடுத்து முதல் 2 இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் இடையே, 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி  2-வது சுற்றில் வோலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டதில், தொடக்கம் முதலே நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 73 சதவீத வாக்குகள் பெற்று ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபராக அபார வெற்றி பெற்றார்.

ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (Servant of the people) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார். இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார்.

மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார். அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

UKRAINEPRESIDENTIALELECTIONS, VOLODYMYRZELENSKY, COMEDYACTOR