'இந்த' மருந்தால் 'நல்ல' பலன்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்'... அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ள 'மகிழ்ச்சி' செய்தி...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதித்தவர்களுக்கு ரெமெடிசிவர் எனும் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்காக உபயோகிக்கும் அங்கீகாரத்தை அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 10,64,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,47,411 பேர் குணமடைந்துள்ளனர். 61,656 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா சிகிச்சை தொடர்பான பரிசோதனையில் ரெமெடிசிவிர் என்னும் மருந்து நோயாளிகள் விரைவாக குணமாக உதவுகிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு மருந்துக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்காத நிலையில், நியூயார்க் டைம்ஸ் தகவல் படி ரெமெடிசிவருக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள டாக்டர் அந்தோணி ஃபாசி, "அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஆய்வில், ரெமெடிசிவிர் கொடுக்கப்பட்ட நோயாளிகள் மற்றவர்களை விட வேகமாக குணமடைந்துள்ளனர். குணமடைவதற்கான நேரத்தை குறைப்பதில் ரெமெடிசிவிர் ஒரு தெளிவான, குறிப்பிடத்தக்க, நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதை தரவுகள் காட்டுகின்றன" எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரெடிம்சிவிர் மருந்து பாதுகாப்பானது, பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என இதுவரை எந்த உலக மருந்து நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.