இலங்கை குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலி.. ஐ.நா. அறிக்கை சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 359 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 45 பேர் சிறுவர்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலி.. ஐ.நா. அறிக்கை சொல்வது என்ன?

யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் 27 சிறுவர்களும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடந்த தாக்குதலில், 18 மாத கைக்குழந்தை உள்பட 13 குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களின்  5 குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 4 பேர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. சில குழந்தைகள் தங்கள் கண்முன்னே பெற்றோரை அல்லது தாய், தந்தையரில் ஒருவரை இழந்ததை பார்த்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் யுனிசெப் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 'இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும். இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத அமைப்பினர் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் தலைவன், மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் அடையாளத்தை இப்போது வெளியிட முடியாது என்றும், விசாரணையை பாதிக்கும் என்பதால் பயங்கரவாதிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்துவிட்டார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 17 வெளிநாட்டினரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

SRILANKABOMBINGS, SRILANKABLAST, CHILDREN, UNITEDNATIONS