சீனா, இத்தாலியை விட 'இந்திய' வைரஸ் ஆபத்தானது... நேபாள பிரதமரின் 'சர்ச்சை' பேச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா, இத்தாலியை விட இந்தியாவில் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது என நேபாள நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்து இருக்கிறார்.
வல்லரசு நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பாராட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நேபாளத்தின் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய கே.பி.ஷர்மா ஒலி,'' இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நேபாளத்துக்குள் வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலிருந்து முறையான பரிசோதனைகளைச் செய்யாமல் மக்களை அழைத்துவரும் சில கட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளுர்ப் பிரதிநிதிகள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். வெளியிலிருந்து மக்கள் வந்துகொண்டே இருப்பதால் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. சீனா மற்றும் இத்தாலியில் உள்ள வைரஸைவிட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தாக உள்ளது. அதிகமான மக்கள் அங்கு இந்தத் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்,'' என்று கூறியுள்ளார்.
மேலும் என்ன விலை கொடுத்தாவது இந்திய நிலப்பரப்பின் ஒருபகுதியாக இருக்கும் கலாபானி - லிம்பியாதூரா-லிபுலேக் பகுதிகளை நேபாளுக்குக் கொண்டு வருவோம் என்றும் நேபாள பிரதமர் சூளுரைத்து இருக்கிறார். அண்மையில், நேபாள அமைச்சரவை இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய அந்நாட்டின் புதிய அரசியல் வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய அதிகாரிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. நேபாளத்தின் இந்த பகிரங்க பேச்சுக்கு பின்னால் சீனா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.