‘வாரம் ஃபுல்லா ஒரே சோகம்’.. ‘இப்போ இவரால எங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துருக்கு’.. இத்தாலிக்கு புத்துணர்ச்சி கொடுத்த ஒருவர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் இத்தாலியில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரோனா வைரஸ் தொடங்கிய சீனாவை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இத்தாலியில் உள்ள முதிவர்களின் அதிகமான எண்ணிக்கை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் குணமடைந்திருப்பதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களால் மிஸ்டர் ‘பி’ என குறிப்பிடப்படும் அவர் இத்தாலியில் 1919ம் ஆண்டு பிறந்துள்ளார். ரிமினியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். இதனை ரிமினி பகுதியின் துணை மேயர் குளோரியா லிசி உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு மீண்ட அதிக வயதுடைய முதல் நபர் இவர் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த லிசி, ‘கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமடைந்த நபரிடமிருந்து அனைவருக்குமான எதிர்கால நம்பிக்கையை உணர்கிறோம். இந்த வாரம் ஏராளமான சோக செய்திகளை பார்த்தோம். வயதானவர்களிடம் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அவர் குணமடைந்தது நம்பிக்கை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.