‘வேண்டுமென்றே’ விபத்தை ஏற்படுத்தியவர்... கோர்ட்டில் கூறிய ‘அதிர்ச்சி’ காரணம்... நீதிபதி கொடுத்த ‘அதிகபட்ச’ தண்டனை...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் வேண்டுமென்றே முதியவர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி விரும்பியபடியே ஜெயில் தண்டனை பெற்றுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் பார்த்துவந்த வேலையை இழந்ததால், தான் சேமித்து வைத்த பணத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் கையில் இருந்த பணம் தீர்ந்ததும் தன் காரிலேயே வசிக்கத் தொடங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவருடைய லைசென்ஸும் காலாவதியாக அதற்கு மேல் தன்னால் சமாளிக்க முடியாதென உணர்ந்த அவர் அதற்கு ஒரு வழியையும் கண்டுபிடித்துள்ளார். அதன்படி ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று சில காலம் அரசாங்க பணத்தில் தங்கி சாப்பிடலாம் எனத் திட்டமிட்டுள்ளார். பின்னர் தன் திட்டத்தின்படி, சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர்மீது வேண்டுமென்றே காரைக் கொண்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதில் காயமடைந்த நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், “வீடு மற்றும் சாப்பிட உணவு இல்லாத காரணத்தால் சில காலம் ஜெயிலில் இருக்கலாம் என வேண்டுமென்றேதான் அந்த விபத்தை ஏற்படுத்தினேன்” எனக் கூறியுள்ளார். அந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்க, அந்த முதியவர் அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். வழக்கமாக ஜெர்மனியில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.