‘நாங்க நினச்ச மாதிரி இது இல்ல’... அசுர வேகத்தில்... புல்லட் ரயில் போல நியூயார்க் நகரில் கொரோனா பரவுது’!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று புல்லட் ரயில் வேகத்தில் பரவி வருவதாக அந்நகர கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் 55,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். நியூயார்க் நகரில் மட்டும் 25,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ மார்க் க்யூமோ, இதுகுறித்து கூறும்போது, “நியூயார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று புல்லட் ரயில் வேகத்தில் பரவுகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருகிறது. நாங்கள் நினைத்துப் பார்க்காத வண்ணம் எண்ணிக்கை கூடி வருகிறது. மிக மோசமாக பரவி வருகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 210 பேர் நியூயார்க் நகரில் மட்டும் இறந்துள்ளனர். அங்கு நிலைமையை சமாளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் 30 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் அங்கு தேவைப்படுவதாக ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் அதிகரித்து வரும் பாதிப்பை சுட்டிக்காட்டி, அமெரிக்காவே கொரோனாவின் மையமாக அதாவது கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்படும் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.