புரட்டிப்போடும் 'கொரோனா' அச்சுறுத்தலிலும்... 'உலகிற்கே' வெளியாகியுள்ள 'நற்செய்தி'... 'ஆச்சரியம்' தரும் நிகழ்வு!...
முகப்பு > செய்திகள் > உலகம்ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த பிரம்மாண்ட ஓட்டை ஒன்று தற்போது மூடப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமிக்கு பாதுகாப்பாக திகழும் ஓசோன் படலம் சூரியனில் இருந்து வரும் தோல் புற்றுநோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான புற ஊதாக்கதிர்களை தடுத்து மனிதர்கள் மீது அவை படாமல் காக்கிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாகவே பூமியில் உருவாகும் அதிகப்படியான மாசுபாடு காரணமாக ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஓசோன் படலத்தில் ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புற ஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உலக நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடுகள் ஒருபுறம் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இதற்கிடையே முன்னதாக கடந்த மார்ச் மாதம் வட துருவத்தில் ஓசோன் படலத்தில் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் அந்த ஓட்டை பெரிதாகி தெற்கு நோக்கி நகர்ந்தால் மனிதர்களுக்கு அது பேராபத்தாக மாறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆர்க்டிக் பகுதியில் உள்ள அந்த ஓட்டை மூடப்பட்டிருப்பதாக ஐரோப்பிய செயற்கைக்கோளான கோபர்நிகஸ் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான உலக நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறைந்துள்ளதால் இது ஏற்பட்டுள்ளதா என்றால், அது காரணம் இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். போலார் வொர்டெக்ஸ் எனப்படும் துருவ சுழலே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.