“வீட்ல புதையல் இருக்கு.. ரூ. 3 லட்சம் செலவாகும்!” .. 'மோதிக்கொண்ட போலி மாந்திரீகர்கள்'.. விஏஓ உட்பட கூண்டோடு சிக்கிய கும்பல்! திருப்பங்கள் நிறைந்த பரபரப்பு சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உழைக்காமல் உயர்ந்துவிடலாம் என்கிற ஆசையில், புதையல் போதையில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஏமாற்றிக்கொண்டதோடு பண மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார்களும் அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வீட்ல புதையல் இருக்கு.. ரூ. 3 லட்சம் செலவாகும்!” .. 'மோதிக்கொண்ட போலி மாந்திரீகர்கள்'.. விஏஓ உட்பட கூண்டோடு சிக்கிய கும்பல்! திருப்பங்கள் நிறைந்த பரபரப்பு சம்பவம்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த உள்ள பேரையூர் அருகே அமைந்திருக்கிறது ஆனையூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கீழ காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் தலையாரி மகாதேவனுடன் சென்று, முத்து என்கிற சாமியாரை சந்தித்துள்ளார். குறி பார்த்துச் சொல்வதாக கூறி ஏமாற்றி வந்த முத்து என்கிற பெண் சாமியார், அவர்களிடம், “உன் வீட்டருகே புதையல் உள்ளது.. அதை நான் எடுத்து தருகிறேன். ஆனால் அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்” என்று கூறியுள்ளார். ஆனால் இவர்களோ ஏற்கனவே வறுமையில் உள்ள தங்களிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறி திரும்பிவிட்டனர்.

இதனையடுத்து மகாதேவன் தோப்படைப்பட்டியைச் சேர்ந்த விஏஓ செல்லபாண்டியனிடம் இது குறித்து கூற செல்லபாண்டியன் அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் என்பவருடன் சேர்ந்துகொண்டு, தூத்துக்குடியில் மாந்திரீகம் செய்து வரும் அருள்சாமி என்பவரிடம் இந்தப் புதையலை எடுப்பதற்காக உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து அருள்சாமி இதற்குள் நுழைந்தார். அவரோ, “புதையல் இருப்பது உண்மைதான்.. ஆனால் அதை எடுக்க 3 லட்சம் ரூபாய் செலவாகும்” என்று கூறியதோடு 2 லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாகக் பெற்றுள்ளார். அதன்பிறகு ஆனையூர் வரும் சமயத்தில் பூஜை நடத்தியுள்ளார். இதனிடையே சாமியார் அருள்சாமி மீது செல்ல பாண்டியனுக்கு சந்தேகம் வர இதையடுத்து முதுகுளத்தூரில் மாந்திரீகம் செய்து வரும் செந்தில் என்கிற தேங்காய் செந்தில்குமாரை அவர் அணுகியுள்ளார். கையில் நூல் வைத்துக்கொண்டு தேங்காயை தன் எண்ணப்படி சுற்ற்யுவதாகக் கூறி ஏமாற்றி, தேங்காய் சுற்றும் திசையில் புதையல் இருப்பதாக நம்பவைக்கும் திறமைசாலியான தேங்காய் செந்திலும் இதற்குள் வர, அவர் தூத்துக்குடி சாமியார் அருள்சாமியுடன் சேர்ந்து செல்லப்பாண்டியனை ஏமாற்ற திட்டம் தீட்டினார்.

இதற்காக ஆனையூரில் மீண்டும் இவர்கள் பூஜை நடத்தியதுடன் செல்ல பாண்டியனுக்கு தெரியாமல் அந்த நிலத்தில் விநாயகர், சிவலிங்கம், நந்தி, லட்சுமி உள்ளிட்ட 6 ஐம்பொன் சிலைகளையும், போலி தங்க நாணயங்களையும் புதைத்து வைத்தனர். கொஞ்ச நாட்கள் போனதும் அங்கு சென்ற சாமியார்கள் இருவரும் ஏற்கனவே தாங்கள் புதைத்து வைத்திருந்த சிலைகளை விஏஓ செல்லப்பாண்டியனிடம் எடுத்துக் கொடுத்துள்ளனர். இதை வாங்கிக்கொண்ட அவர் தோப்படைப்பட்டியில் சிலைகளை புதைத்துவிட்டு சிலைகளை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர்தான் இந்த விவகாரங்கள் எல்லாம் ராமநாதபுரம் எஸ்பி வருண் குமாருக்கு தெரியவந்தது. உடனடியாக ஒரு தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் தேடுதல் வேட்டையும் நடத்தினர். அப்போது தோப்படைப்பட்டியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகள், தகடுகள், சில்லறை நாணயங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டதோடு இது தொடர்பாக  தேங்காய் சாமியார் செந்தில், பெண்சாமியார் முத்து, சிலைகளை புதைத்த விஏஓ செல்லபாண்டியன், அவருக்கு உதவிய முருகராஜ், தலையாரி மகாதேவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் அதிக லாபம் பார்த்த சாமியார் அருள்சாமி தலைமறைவானதை அடுத்து தூத்துக்குடி போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.