இரண்டாம் அலை 'பதற்றம்'... மீண்டும் 'கொத்தாக' தோன்றிய பாதிப்பால்... 'முடக்கப்பட்ட' சீன நகரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் ஜிலின் நகரில் மீண்டும் தோன்றியுள்ள கொரோனா பாதிப்பால் அந்நகரம் முடக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை 'பதற்றம்'... மீண்டும் 'கொத்தாக' தோன்றிய பாதிப்பால்... 'முடக்கப்பட்ட' சீன நகரம்...

40 லட்சம் மக்கள் தொகை கொண்ட சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலினில் கொத்தாக தோன்றியுள்ள கொரோனா பாதிப்பால் அந்த நகரம் பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அங்கு கொரோனா இரண்டாவது அலை பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜிலின் நகரில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நகரிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலையே உள்ளது.

அத்துடன் அங்குள்ள தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள் அனைத்தும் காய்ச்சல் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை விற்பனை செய்தால் உடனடியாக அதுகுறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

இங்குள்ள ஷுலான் என்ற புறநகர்ப்பகுதியில் கடந்த வாரம் கொத்தாக கொரோனா தொற்று தோன்றியுள்ளது. ஜிலின் நகரில் தோன்றியுள்ள 6 புதிய தொற்றுக்கள் ஷுலான் பரவலைச் சேர்ந்ததுதான் எனவும், ஷுலானில் மட்டும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இரண்டாம் அலை ஆபத்து உள்ளதால் கொரோனா வைரஸ் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாமென சீன அதிபரும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ள ஜிலின் நகரம் ரஷ்யா வடகொரியா எல்லைகளைக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.