அரசுக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, 18 வயது சிறுவன் ஒருவனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவைத் சேர்ந்தவன் 18 வயதான முர்தஜா குரேய்ரிஸ் (Murtaja Qureiris) எனும் சிறுவன். இவனுக்கு 10 வயதாக இருந்தபோது, அதாவது கடந்த 2011-ம் ஆண்டு ஷியா பிரிவினரை அரசு நடத்தும் விதம் சரியில்லை என, சவூதி அரச குடும்பத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவன் எனத் தெரிகிறது. அப்படியான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, அச்சிறுவனின் மூத்த சகோதரர் ஏற்கெனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேபோன்றதொரு சைக்கிள் போராட்டத்திலும், முர்தஜா தனது 10-வது வயதில் அனுமதியின்றி பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதற்காக அந்த சிறுவன், தனது 13-வது வயதில், கடந்த 2014-ம் ஆண்டு குடும்பத்துடன் பஹ்ரைன் பயணித்து கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டான். மூன்றரை ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவும், பின் தீவிரவாதம், போராட்டத்தில் பங்கெடுத்தல், போலீசாரைத் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளியாகவும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறான். சிறையில் அடைக்கப்பட்ட முர்தஜா, கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். இந்த சமயத்தில், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டால், விடுவிப்பதாக முர்தஜாவிடன் விசாரணை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
பின்னர் 2017-ம் ஆண்டு மே மாதம் 16 வயதில் சிறுவன், அல்மாபாத் சிறைக்கு மாற்றப்பட்டான். இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டிருக்கும் 37 பேருடன் சேர்ந்து, முர்தஜாவிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் முர்தஜாவிற்கு 18 வயதாகிவிட்டதால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.