இலங்கையில் துப்பாக்கிச் சண்டை.. வீட்டில் பதுக்கிய குண்டுகள் வெடிப்பு.. 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் துப்பாக்கிச் சண்டை.. வீட்டில் பதுக்கிய குண்டுகள் வெடிப்பு.. 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையிலும் இன்னும் பல இடங்களில் வெடி குண்டுகள், வெடி பொருள்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வப்போது சிறிய குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடைபெறுவதால் அந்நாட்டு மக்கள் தொடர் பதற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சாய்ந்தமருது அருகே ஒரு வீட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது வெள்ளிக்கிழமையன்று இரவு, அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சண்டை நடத்தினர். இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் எனப்படும், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அந்த வீட்டில் நடத்திய சோதனையில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 15 பேரில் 4 முதல் 6 பேர் வரை மனிதவெடிகுண்டுகளாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சோதனையில்  வீட்டில் இருந்து வெடி பொருள்கள், ஜெலட்டின் குட்சிகள், மடிக் கணினிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் தேவாலய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகச் சிலரின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த அதே கறுப்பு நிற உடைகளும் சோதனையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை, செந்நெல் கிராமம் ஆகிய பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தில் உள்ள சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SRILANKA, GUNBATTLE