'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் தங்கதுரை. 29 வயதான தங்கதுரை சென்னை போரூரில் சொந்தமாக இண்டிகோ மற்றும் டெம்போ டிராவல்ஸ்களை வைத்து நடத்தி வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி,தான் தங்கியிருந்த அறையில் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளார்.
தாமதமாகத்தான் தங்கதுரையின் அறையில் இருந்த டைரி கிடைத்தது. அதில் எல்லா கணக்கு விபரங்களையும் எழுதி வைத்திருந்த தங்கதுரை, அதில் தன்னிடம் அவிவா என்கிற தனியார் நிறுவனம் 5 லட்சம் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, அதற்காக, பணம் வேண்டும் என்று தங்கதுரையிடம் கேட்டதாகவும், அதனால் தங்கதுரையும் 1 லட்சத்து 75 ஆயிரம் வரை அந்தக் கும்பலிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தையோ, அல்லது கடனையோ தரக் கோரி கேட்டபோதுதான் தங்கதுரைக்கு, அது ஒரு மோசடி கும்பல் என தெரியவந்ததாகவும், அதனால், ‘நான் ஏமாந்துட்டேன் அம்மா., அதனால் நான் போகிறேன்’ என எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் தங்கதுரையின் தாயார் கற்பகவள்ளி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இதுபற்றி பேசிய தங்கதுரையின் அப்பா, தர்மராஜ் சுயத் தொழில் செய்து வருமானம் ஈட்டிவந்த தன் மகனை இந்த மோசடி கும்பல் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கலெக்டரிடம் இதுபற்றி புகார் அளித்து அந்த கும்பலைக் கண்டுபிடித்துத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், உறுதியாக அதைச் செய்வதாக கலெக்டர் வாக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.