‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி?... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருமகளுக்கு பிறந்த குழந்தை தங்களது மகனுடைய குழந்தை இல்லை என்று கூறியதால், கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அடுத்த 15 நாட்களில் மார்ச் 1-ம் தேதியே இந்தோனேசியாவில் உள்ள பேக்ஸ் ஓசேன் என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக முருகன் சென்றுள்ளார். இந்நிலையில் கணவரின் வீட்டில் வசித்து வந்த தேன்மொழி, மார்ச் 8-ம் தேதி கர்ப்பம் அடைந்துள்ளதாக மருத்தவர்கள் உறுதி செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகனின் பெற்றோர், தங்களது மகனுடன் 2 வாரங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில், தேன்மொழி கர்ப்பமடைந்ததை ஏற்க மறுத்ததுடன், வீட்டை விட்டு அவரை வெளியேற்றினர். மேலும், இந்தோனேஷியாவில் இருந்த கணவரும், மனைவியிடம் செல்ஃபோனில் பேசுவதை நிறுத்தியுள்ளார். அதன்பின்னர் கோவையில் உறவினர் வீட்டில் மன உளைச்சலுடன் இருந்து வந்த தேன்மொழிக்கு, கடந்த நவம்பர் 6-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கணவர் வீட்டாரிடம் சொல்லியும் அவர்கள் வந்து பார்க்கவில்லை.
இதையடுத்து 40 நாட்கள் கழித்து கணவர் வீட்டுக்கு கைக்குழந்தையுடன் வந்துள்ளார் தேன்மொழி. ஆனால் அப்போதும் கணவர் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர்கள் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன் குழந்தைகக்கு முருகன் தான் தந்தை என்று கூறிய தேன்மொழி, டி.என்.ஏ. சோதனை மேற்கொண்டால் உண்மை தெரியவரும் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.