ராமநாதபுரத்தில் வாகன சோதனையின்போது பெண்ணை போலீஸ் லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளுர் என்பவர் மனைவி மாரிக்கண்ணு மற்றும் கண்ணன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் துரத்தியேந்தல் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் 3 பேர் ஒரே வாகனத்தில் வருவதைப் பார்த்து அவர்களை நிற்கச் சொல்லியுள்ளனர்.
அப்போது போலீஸார் மாரிக்கண்ணுவின் தலையில் லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாரிக்கண்ணுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் வழக்கைத் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுபற்றி ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.