'பேருந்தை முந்த முயன்ற பைக்'... 'சென்னை'யில் நடந்த கோர விபத்து'... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை நந்தனத்தில், 2 இளம்பெண்களுடன் வந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில்  2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

'பேருந்தை முந்த முயன்ற பைக்'... 'சென்னை'யில் நடந்த கோர விபத்து'... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த, சிவா, பவானி, நாகலட்சுமி ஆகிய மூன்று பேரும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பைக்கை ஓட்டிய சிவா மட்டும் தலைக்கவசம் அணிந்திருந்தார்.

இதனிடையே காலை 9.30 மணிக்கு, நந்தனம் கலைக்கல்லூரிக்கு எதிரே, அண்ணா சாலையில் சென்றபோது மேற்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் 15ஏ மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பக்கவாட்டில் இவர்கள் மூவரும் சென்ற பல்சர் இருசக்கர வாகனம் செல்ல, அதன் அருகே மற்றொரு இருசக்கர வாகனமும் சென்றது.

அப்போது பல்சர் பைக்கில் மூவருடன் சென்ற சிவா, பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் முந்தி செல்ல முயற்சித்தபோது அருகில் உள்ள இருசக்கரவாகனத்தின் மீது பல்சரின் பம்பர் இடித்து, பல்சர் பைக்கில் சென்ற மூவரும் நிலைதடுமாறி சாலையில் வலதுபுறமாக விழுந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மூவர் மீதும் ஏறி இறங்கியதில், இளம் பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

பல்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சிவா படுகாயங்களுடன், ஆபத்தான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிவேகமாக செல்வது, விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்றவைகளே விலைமதிப்பில்லாத உயிரை இழப்பதற்கு காரணமாகி விடுகிறது என காவல்துறையினர் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

ACCIDENT, CHENNAI, ANNA SALAI, NANDANAM