‘அவளே போயிட்டா, மகனைக் கொன்று’... ‘தந்தை செய்த பகீர் காரியம்’... 'உருகவைத்த கடிதம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவி உயிரிழந்த சில மணி நேரத்தில், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தன்னுடைய மாற்றுத் திறனாளி மகனை கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோவில் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர் 42 வயதான கார்த்திகேயன். இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் அதிபரின் மகள் பாரதியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார் கார்த்திகேயன். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால், கார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு 13 வயதான சபா என்ற மகன் உள்ளார். சபா, சிறிது மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6 வருடங்களாக வாதநோயால் பாதிக்கப்பட்ட இவரது மனைவியையும், மனநிலை பாதித்த மகனையும் தனி ஆளாக கார்த்திகேயன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி, குடியிருப்பு பாராமரிப்பு கட்டணம் வசூலிக்க கடந்த வியாழ்க்கிழமை, கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றார். வெகு நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால், மாலையில் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று காவலாளி கதவை தட்டிய போது கதவு திறந்தது.
அப்போது, 3 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டிலிருந்து, 15 பக்கம் அளவில், கார்த்திகேயன் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘தனது மனைவி அதிகாலை 3 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனைவி இல்லாத வாழ்க்கையை இனி வாழ பிடிக்கவில்லை. மேலும் எனது மகனும் மாற்றுத்திறனாளி என்பதால், அவனை கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். எனவே மகனும் நானும் சாகப்போகிறோம்’ என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்குமாறும் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்து போனது தெரியவந்ததும், அடுத்த சில மணி நேரத்தில் கார்த்திகேயன், தனது மகனை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.