'ராசாத்தி போல இருந்தா என் புள்ள'... 'இப்படியா பாக்கணும்'... 'கதறிய அப்பா'... நெஞ்சை உருக்கும் கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி, ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் அயன்சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் ரேகா. இவர் திருச்சி மாவட்டம் வடுகர்பேட்டையில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, அப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதியன்று ரேகாவின் சகோதரர் கருப்பையாவிற்கு போன் செய்த பள்ளி நிர்வாகம், ரேகாவை காணவில்லை என கூறியுள்ளார்கள்.
இதையடுத்து ரேகாவின் பெற்றோர் வடுகர்பேட்டைக்கு வந்து பல இடங்களில் விசாரித்தும், ரேகா பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு தங்களது ஊருக்கு சென்றனர். இந்நிலையில் வடுகர்பேட்டையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ரேகா இறந்து கிடப்பதாகவும், அவருடைய பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையை வைத்து அடையாளம் கண்டதாகவும், ரேகாவின் பெற்றோருக்கு கல்லக்குடி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைக்கேட்டுப் பதறித் துடித்துக் கொண்டு ஓடிய அவர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று மகளின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார்கள். ராசாத்தி போல உன்னை வளர்த்தனே, என அவரது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. ரேகாவின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரேகா எப்படி இந்த இடத்திற்கு வந்தார், எதனால் மரணம் நிகழ்ந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 20 நாட்கள் ஆன நிலையில் ரேகாவின் பெற்றோர் மற்றும் வேப்பங்குழி, கள்ளூர், அயன்சுத்தமல்லி கிராமங்களை சேர்ந்த அவர்களுடைய உறவினர்கள் என சுமார் 200 பேர் நேற்று காலை திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வடுகர்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி முன்பு ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவி ரேகா மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும், விடுதியிலிருந்து ரேகா வெளியேறியது பற்றி பள்ளி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அவர்கள் கோஷமிட்டார்கள். இந்த சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலை மறியலால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.