'ஸ்னாக்ஸ் வாங்க போனாரு'... 'நைசா சாப்பாட்டுல இத கலந்துட்டேன்'... அதிரவைத்த 'எய்ட்ஸ் கொள்ளையன்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில், உணவில் 'லோரா சிப்பம்' மாத்திரை கலந்து பொறியாளரிடமிருந்து தங்கசங்கிலியை பறித்த கொள்ளையனை, காவல்துறையினர் சாமர்த்தியமாக கைது செய்தனர்.
சென்னை தெற்கு ரெயில்வேயில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அமித்குமார். இவர் கொல்கத்தாவில் இருக்கும் தனது குடும்பத்தினரை பார்த்துவிட்டு அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை திரும்பியுள்ளார். ரெயில் ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே வந்தபோது, வீட்டில் கொடுத்த உணவை சாப்பிடுவதற்காக உணவு பொட்டலத்தை வெளியே எடுத்து வைத்து விட்டு, ரெயில் நிலையத்தில் இறங்கி நொறுக்குத் தீனி வாங்கிக் கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து உணவை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து ரயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்த போது, அவரை மீட்ட ரெயில்வே காவல்துறையினர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்பு அமீத்குமாரிடம் நடத்திய விசாரணையில், அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. ரெயில் பயணத்தின் போது, தான் சாப்பிட்ட பின்னர் மயங்கியதாகவும், தனது அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மஞ்சள் டி-சர்ட் அணிந்திருந்த வட மாநில நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனே உஷாரான காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ரெயில்வே டிக்கெட் கவுண்டரில் இருந்து மஞ்சள் டி-சர்ட் அணிந்திருந்த நபர் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து டிக்கெட் கவுண்டரில் விசாரித்த போது அவர் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சென்றதையும் கண்டறிந்தனர். இதையடுத்து கொள்ளையனின் செல்போன் எண்ணை வைத்து அவனை கண்காணித்த காவல்துறையினர், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து அவனை கைது செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் பிரபல மயக்க மாத்திரை கொள்ளையன் சுபுகான்கர் சங்பூர்த்தி என்பது தெரியவந்தது. காவல்துறையினரியிடம் அவன் அளித்த வாக்குமூலத்தில் ''சம்பவத்தன்று டிபன்பாக்சை வைத்து விட்டு நொறுக்குத் தீனி வாங்க ஏலூரு ரெயில் நிலையத்தில் அமீத்குமார் இறங்கியதும், டிபன் பாக்சில் இருந்த உணவில் 'லோரா சிப்பம்' என்ற மயக்க மாத்திரையை பொடியாக்கி தூவியுள்ளான் கொள்ளையன் சுபுகான்கர். அவரும் உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்தில் மயங்கி விட, அருகில் அமர்ந்திருந்த கொள்ளையன் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றிக் கொண்டு இடம் மாறி அமர்ந்துள்ளான்.
எய்ட்ஸ் நோயாளியான சுபுகான்கர் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனிடையே லோரா சிப்பம் மாத்திரையை சாப்பிடுபவர்களுக்கு 8 மணி நேரம் வரை கண் விழிக்க முடியாது என்பதால் மிகவும் தைரியமாக இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான். இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கினால் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.