உள்ளூர் முதல் உலகம் வரை விரைவு செய்திகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-
1. உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி சிந்து, நள்ளிரவு இந்தியா திரும்பினார். தங்க மங்கையாக முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
2. கடந்த 22-ம் தேதி முதல் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார்.
3. நாட்டின் முதல் பெண் டிஜிபியான காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மும்பையில் உடல் நலக்குறைவால் திங்கள் அன்று உயிரிழந்தார். 1973-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் சவுத்ரி.
4. ஐநா மனித உரிமை ஆணையம் சார்பில், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்று பேச, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது குறித்து திமுக தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
5. சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, 40 அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
6. வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, புதிய சிலையை ஒரேநாள் இரவில் மாவட்ட நிர்வாகம் அமைத்து கொடுத்தது. இதையடுத்து அங்கு பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பியது.
7. அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
8. ஈரான் நாட்டிலிருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வந்து, ஹோட்டலில் தங்கி கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பேர் கைதாகிய நிலையில், தப்பியோடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
9. மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
10. பற்றி எரியும் அமேசான் காடுகளைக் காப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார்.